திங்கள், 24 பிப்ரவரி, 2014

திரு.சாண்டோ. குழந்தை சாமி ஐயா அவர்கள்

குரு ஸ்ரீ சுப்பராவ் சுவாமிகளின் சீடரும், எங்கள் அனைவருக்கும் பேராசானும், இதுவரை ஆயிரத்துக்கும் மேட்பட்டவர்களுக்கு நமது பாரம்பரிய வீரக்கலைகளில் பயிற்சி அளித்தவரும், இன்றும் நமது வீரக்கலைகளை பரப்பிட எங்கள் அனைவருக்கும் பெரும் உந்துசக்தியாக உள்ளவரும், நாங்கள் பெரியவர் என்று அன்புடன் அழைக்கும் எங்கள் பெருமதிப்புக்குரிய. சாண்டோ. A.குழந்தைசாமி ஐயா அவர்களின் புகைப்படத்தினை பணிவுடன் பதிவேற்றுகிறோம்..

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

சிலம்பம் பயில்வதன் நன்மைகள்




      சித்த தத்துவத்தின் படி நமது உடல் 96 தத்துவங்களால் ஆனது. அவற்றில் வாதம், பித்தம், கபம் என்பன முத்தோடங்கள் என அழைக்கப்படும். 
      
    இந்த முத்தோடங்களிடையே ஏற்படும் பேதங்களே நோய் என அறியப்படும். மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. - என்று திருக்குறள் கூறும்.

இந்த முத்தோடங்களும் தம்மிடையே இருக்க வேண்டிய நிலையில் இருப்பின் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே கருத்து.

   இன்றைய நாட்களில் நமது சீர்கெட்ட உணவுப்பழக்கம், முறைகெட்ட வாழ்க்கை முறை, பயமுறுத்தும் பணிச்சுமை, மயக்கம் தரும் மன அழுத்தம் என்ற நமது வாழ்க்கை முறையே நமது உடல் நலம் சிதைந்து போக பெருமளவு காரணமாக இருக்கிறது.

தேரையர் என்ற சித்தரால் எழுதப்பட்ட,கிபி 15ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கருதப்படும் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூல் சிலம்ப பயிற்சி முத்தோடங்களையும் சமநிலைப்படுத்தி உடலை காக்கும் என்று பகர்கிறது.

     சிலம்பம் பழகப்பழக தனி மனித ஒழுக்கமும், மாண்பும் வளரும். ஏனைய அனைத்தும் ஒவ்வொன்றாய் தாமே சரியாகும்.(ஏனென்றால் உலகின் மாற்றம் தனி மனிதனிடமிருந்து துவங்க வேண்டும் அல்லவா?)